சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர், பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆட்டோ டிரைவரை பாஜகவினர் தாக்கியதாக செய்தி வெளியாகியது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் கதரின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்து, பின் இனிப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ஆட்டோ டிரைவர் கதிரை பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாகத் தவறாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவரை யாரும் தாக்கவில்லை. அப்புறப்படுத்தவே செய்தார்கள்.
தவறாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் கதிரின் வீட்டுக்கு இன்றைக்கு நான் சென்றேன். நட்புறவு பாராட்டவே அவரது வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் சம்பவம் குறித்துப் பேசினேன். அதற்கு, `நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அதுக்கு நீங்கள் சிரித்துக்கொண்டே பதிலளித்தீர்கள்’ எனக் கதிர் தெரிவித்தார்.
ஒருவரை அடிக்க வைத்துச் சிரிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கொடுங்கோலாக அரசியலில் பணிபுரியவில்லை. எதற்கெடுத்தாலும் சிலர், பா.ஜ.க-வையே குறை சொல்கிறார்கள். சாமானியர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்பதுபோல அவதூறு பரப்பப்படுகிறது. சாமானியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றார்.



