சென்னை: தாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கவிழ்க்க நினைத்த தினகரன், மனது மாறியிருக்கும் என்று எண்ணியே தாம் சந்தித்ததாக ஓபிஎஸ்., கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்! அப்போது அவர், டிடிவி தினகரன் தற்போது ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். 36 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் முயன்றபோது அதைத் தடுக்கவே தாம் அப்போது அவரை சந்தித்ததாக விளக்கமளித்தார்.
தினகரன் தற்போது பொய் கூறியதால், அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் தம்மிடம் மன்னிப்பு கோரினார் என்று கூறிய ஓபிஎஸ்., தமக்கு குறுக்கு வழியில் முதலமைச்சராகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை என்றார்.
செய்தியாளர் சந்திப்பில், ஓபிஎஸ் கூறியவற்றில் இருந்து…
- தினகரன் தரப்பு பல முறை அழைப்பு விடுத்ததால், ஜூலை மாதம் தினகரனை சந்தித்தது உண்மைதான்!
- அதற்கு அடுத்த மாதம்தான் அதிமுக இணைப்பு நடந்தது!
- பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் தினகரன்!
- மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்
- நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்!
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன்,
- நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் உள்ளார்
- டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன்
- எனக்கிருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டுமென தினகரனும் அந்த கொடிய கூடாரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது
- ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தினகரன் அந்தப் பக்கமே வரவில்லை!
- அவருக்கு அம்மாவைப் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது? அவர் எந்தக் கோவிலுக்கு போனார்?
- அதுதான் எனக்கு தினகரன் மீது கோபம்? மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன், அந்த திருப்தியே போதும்; ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை
- மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில்தான் டிடிவி தினகரனை சந்தித்தேன்; ஆனால் கட்சியை கைப்பற்றவே அவர் நினைத்தார்!