கோவில்பட்டியில் கேரள அரசு மற்றும் சபரிமலை தேவசம் போர்டை கண்டித்து பாரதிய கிசான் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ள நிலையில், கோவில்பட்டியில் பாரதிய கிசான் சங்கத்தினர் சபரிமலை தேவசம் போர்டு மற்றும் கேரள அரசை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யாத தேவசம் போர்டை கண்டித்தும், தொடர்ந்து கேரள அரசு இந்து மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும், மேலும் இந்தியாவில் உள்ள இந்துக் கோவில்களின் மரபுகள், ஆகமவிதிகள் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் முட்டிக்கால் போட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பாரதிய கிசான் சங்கம் மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சூரிய கலாவிடம் அளித்தனர்.



