நாட்டை விட்டே ஓடிப் போவேன்னு சொன்ன கமல்ஹாசன் எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், சர்கார் படத்திற்கு அதிமுகவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மக்களும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கொச்சைப் படுத்தினால் தன்மானமுள்ள தொண்டர்கள் எதிர்ப்பார்கள். முருகதாஸின் உறவினர்கள் கூட இலவசங்களைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர். அந்த18 தொகுதிகள் மட்டுமல்ல… 234 தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும், அதிமுகவை உடைக்க எதிரிகளுடன் சதி செய்து கொண்டிருப்பவர் டிடிவி தினகரன் என்றும் குற்றம் சாட்டினார் முதல்வர்.
நாட்டை விட்டே ஓடிப் போகப் போவதாக தெரிவித்த கமல்ஹாசன், எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார், இப்போது அரசியலில் நடிக்கிறார் என்றார்.
மேலும், சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து தன்னை சந்தித்தபோது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டாரா என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தமிழக உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,!




