ஆயுட் காலம் வரை பாஜக.,வுடன் கூட்டணி இல்லை; அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அரசியலில் நான் இருக்க மாட்டேன் என்று கூறினார் டிடிவி தினகரன்!
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை மக்கள் மன்றம் ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில் உள்ளனர் . எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தை கொண்டுவர தயாராகி வருகின்றனர் என்று கூறினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அரசைக் கண்டித்து அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த டி.டி.வி. தினகரன் பிறகு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், தனது சொந்த மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை தடுக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை மக்கள் மன்றம் ஏற்கவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். பத்தாயிரம் இருபதாயிரம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்ற பகல் கனவு பலிக்காது என்று பேசினார்.




