திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் வசூல் மட்டுமே செய்யும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், அந்த பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் விதத்தில் சுகாதார ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பக்தர்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரி பிரகார மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. அங்கு கல் மண்டபம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இவ்வேளையில் பல தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
திருக்கோயில் வளாகத்தில் கழிப்பறைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரினால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது.
தமிழகம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மக்காய்ச்சல்கள் பரவி வரும் சூழ்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை.
கோயிலின் வெளிப் பிராகாரத்தில் உள்ள பல இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால், கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கந்த சஷ்டி விழாவுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். மக்களிடம் பணம் வசூலிப்பது ஒன்றே கோயில் நிர்வாகத்தி்ன் குறிக்கோளாக உள்ளது. ஆனால் சுகாதார நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை… என்று குற்றம் சாட்டினார்.




