சென்னை: கஜா புயல் கரையை நெருங்கி வருகிறது. இன்று மாலை புயல் நாகை அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து சென்னையின் முக்கியப் பகுதிகளான அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை காற்று சற்று வேகமாக வீசியது. வானம் கருத்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மத்திய சென்னை, வட சென்னைப் பகுதிகளிலும் பரவலாக இன்று காலை முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வில்லிவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் காலை நேரத்தில் லேசான மழை இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது-
இன்று மதியம் முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் சில இடங்களில் அதிக காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




