
நாகப்பட்டினம் வேதாரண்யம் இடையே கஜா புயல் நள்ளிரவு முழுமையாகக் கரையைக் கடந்து விட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலால் மரங்கள் வேரோடு சரிந்தன. மின்கம்பங்களில் மரங்கள் விழுந்ததால், சாலைகளில் அவை சாய்ந்து கிடந்தன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன.
நவ.6 ஆம் தேதி தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அந்தமானுக்கு நகர்ந்தது. அது 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆகி, படிப்படியாக வலுப்பெற்று நவ.9 ஆம் தேதி புயல் சின்னமாக உருப் பெற்றது. இந்தப் புயலுக்கு இலங்கை அளித்த கஜா என்ற பெயர் சூட்டப்பட்டது.
கஜா புயல் வியாழன் நள்ளிரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, வேதாரண்யம் – நாகப் பட்டினம் இடையே நள்ளிரவு 12 மணிக்கு கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 100 முதல் 110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசியது.
நள்ளிரவு 2:30 மணி அளவில் வானிலை ஆய்வு மையம் கஜா புயல் குறித்து தெரிவித்த போது, கஜா புயல் முழுமையாக கரையைக் கடந்துவிட்டது என்று கூறியது.
கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. அவற்றை அப்புறப் படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.



