பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால் ராமேஸ்வரத்திலிருந்து – சென்னை செல்ல கூடிய அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. அதே போன்று இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில் காலை 8.15 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சென்னையில் இருந்து வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக்கு பின் ரயில் இன்ஞ்சினை வைத்து சோதனை ஓட்டம் நடத்தவுள்ளனர்.
மண்டபம் பாம்பன் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பாம்பன் ரயில் தூக்கு பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை பராமரிப்பு பணிக்காக திறக்க முற்பட்ட போது அதன் இணைப்பு பகுதி உடைந்து விட்டதால் ரயில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் திருச்சியில் இருந்து செல்லும் ராமேஸ்வரம் ரயில் மண்டபம் பகுதியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த திடீர் பிரச்னையால், சுற்றுலா ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல சாலை வழியை பயணிகள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாததால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.