
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை இடைமறித்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது, ”மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச சபாநாயகரும் வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை; இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.
மேலும், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது என்று கூறிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்றும், மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது; தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் யோசனை கூறினார் ஸ்டாலின்!
தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தை நாளையும் நீட்டிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், கஜா புயல் சேதம் பற்றி விவாதிக்க சட்டப் பேரவை கூட்டத்தை நாளையும் நடத்த வேண்டும் என்றார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது நியாயமில்லை என்றார்.
காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை கட்டுகிறதா?, 2 அணை கட்டுகிறதா? என்று கேள்வி எழுப்பினார் துரைமுருகன்! மேலும், கர்நாடகா அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள், எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது, அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறினார்.