சென்னையில் தண்ணீர் லாரி மோதி குடும்பமே பலி

சென்னை: தண்ணீர் லாரி மோதி குடும்பத்துடன் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே லாரி சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீஸார் கூறியதாவது… பொழிச்சலூர் சம்பந்தனார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி பிரீத்தி (24) , 2 வயது குழந்தை ரியா, தாய் சரோஜா (65) ஆகியோருடன் பல்லாவரம் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மகேஷ் பைக் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதை கவனித்த பிரீத்தி தனது குழந்தையை சற்று தள்ளி தூக்கி வீசியுள்ளார். அதே நேரம் அந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பிரீத்தி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பிரீத்தியின் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மகேஷ், அவரது தாய் சரோஜா, குழந்தை ரியா ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மகேஷ் உயிரிழந்தார். பாட்டியும் பேரனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இந்த லாரி மோதி இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார். ஒரு குடும்பம் உள்பட 5 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதவு செய்து லாரி டிரைவர் சுரேஷை (32) கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாவரம் சந்தையில் பகுதியில் நின்று கொண்டு இருந்த இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்ததும், அந்த விபத்தில் அவர் பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்தபோது தான் மற்றொரு விபத்து ஏற்பட்டு கணவன் மனைவி பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி பல்லாவரம் கண்டோன்மெண்டுக்கு சொந்தமானது என்றும் அந்த லாரியை தாற்காலிக டிரைவர் சுரேஷ் ஓட்டிவந்தார் என்பதும் தெரிய வந்தது. இன்று காலை நடந்த இந்த விபத்தால் பல்லாவரம் சந்தை பகுதியில் பெரும் சோகம் நிலவியது.