வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் நெல்லை புகார் பெட்டி
panpozhi girl died electric shock - 2026

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார். அவரின் மூத்த மகள் காயத்ரி(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று காலை மலையடிவார தெருவில் உள்ள தன் ஆச்சி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று காலை வீட்டிற்கு அருகே விளையாடியபோது வீட்டின் முன்பு உள்ள மின்சார சர்வீஸ் எர்த் வயரை தாங்கி நிற்கும் பைப்பைப் பிடித்த போது எதிர்பாராமல் மின்சாரம் எர்த் கம்பி வழியாக பாய்ந்தது. பைப்பில் கசிந்து இருந்த மின்சாரம் காயத்திரியின் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகே இருந்த உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்

அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே சிறுமி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அச்சன்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

அப்போது, வீட்டின் அருகில் உள்ள அதே மின் கம்பத்தில் மாடு உரசிய போது மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாடு உயிர் தப்பியது

சம்பவம் குறித்து மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.

சம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 1 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மின் கம்பத்தில்லிருந்து வீட்டிற்கு வரும் அதிகமான மின் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.

  • செய்தி : குறிச்சி சுலைமான், கடையநல்லூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.