காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14-ம் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டுக்கு திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி எம்.பி. வந்தார். சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த வீரருக்கு வீரவணக்கம் செய்வதற்காகவும், அவரது குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் நேரமாகக்கூட இல்லாமல், ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாம் ஒரு இளைஞரை இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் பல போர் வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
அது மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடப்பதற்கும், இந்தளவுக்கு கவன குறைவாகவும், உளவுத்துறை தோற்பதற்கும், இவ்வளவு பெரிய விபத்து மற்றும் தாக்குதல் நடக்கும் வரை மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது. இந்த கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும், என்றார்.
பேட்டியின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உடனிருந்தனர்.