சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக 20 தமிழர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினரும் தங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினருக்குச் சொந்தமான ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் வி.பி.காலனி, தெற்குத் தெருவில் உள்ளது ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட். இங்கே நேற்று இரவு 11 மணி அளவில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வெளியே சென்ற பின்னர், கடை மேலாளர் சுதாகர் மற்றும் 3 ஊழியர்கள் விற்பனை விவரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். பெட்ரோல் குண்டுகள் விழுந்து உடைந்தது என்றாலும் தீப்பிடிக்கவில்லை. திடீரென குண்டு வீசப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த கடைமேலாளர் அயனாவரம் போலீஸில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிராவில் பைக்குகளில் வந்த 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் செல்வது தெரிந்தது. நேற்று இரவு அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே நாம் தமிழர் கட்சியின் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆந்திர அரசை கண்டித்து ஆவேசமாக பேசினர். கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தியபோது நாம் தமிழர் கட்சியினர் இதில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari