பெரம்பலூரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்று எவர் பெயரையும் குறிப்பிடாமல் அனாமதேயமாக ஒருவர் மீது பாலியல் புகார் அளித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்!
பெரம்பலூரில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அரசுப் பணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது குறித்த செய்திகள் வலைத்தளங்களில் வைரலாயின.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் அருள் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார். ஆனால், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆளும் கட்சி பிரமுகர் என்று குறிப்பிட்டிருந்தாரே தவிர, அந்த நபர் யார் என்று கூறவில்லை.
மேலும், அந்தப் பிரமுகர் பெயரை தெரிவிக்க மறுத்த அருள், பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் பதிவு என்று இரு ஆடியோக்களையும் வெளியிட்டார்.
மேலும், இது குறித்து ஊடகங்களில் தெரிவிப்பதற்காக, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றும் நடத்தப் பட்டது. அதிலும், பெண்களை சீரழித்தவர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்த அருள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வைத்தால் அவர்களின் பெயர்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் அதிமுக.,வினர் கடும் கோபம் கொண்டனர். வேண்டுமென்றே தங்கள் கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வழக்கறிஞர் அருள் அவதூறு பரப்புகிறார் என்று போலீஸில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த போலீஸார், வழக்கறிஞர் அருளை கைது செய்தனர்.
மேலும், பெரம்பலூர் விவகாரம் குறித்து விசா00ரித்து வருவதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிப்பதாகவும் பெரம்பலூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.




