சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து மாணவிகள் இருவர் பலி

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். பெசன்ட் நகரில் உள்ள அவ்வை இல்லத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப் பட்டு வருகிறது. இந்த இல்லம், இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டப் பெண்மணியாகவும், சமூகப் போராளியாகவும் விளங்கிய முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இன்று திடீரென அப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவிகள் இருவர் பலியாயினர். திடீரென அந்த சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும், சிகிச்சை பலனின்றி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றொரு மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.