
வேலுார் மாவட்டத்தில் லிப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அடுத்துள்ள கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்தவா் தட்சிணாமூர்த்தி இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அளவுக்கதிகமான போதையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வினோத், பார்த்திபன் ஆகியோர் தட்சிணாமூா்த்தியிடம் லிப்ட் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் தட்சிணாமூர்த்தி லிப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வினோத், பார்த்திபன் இருவரும் அவரிடம் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தியும், காதை அறுத்தும், ஆத்திரம் அடங்காமல் அவரது தலைமீது கல்லை துாக்கி போட்டு தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை அக்கம் பக்கம் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினா்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்ய வலியுறித்தி அன்வா்த்திகான்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக பேலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



