
17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியனின் மறுவாழ்வுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி ரூ.1½ லட்சம் செலவில் கடை அமைத்து கொடுத்தார். பொதுமக்கள் பாராட்டு….!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மேல வெள்ளமடத்தை சேர்ந்தவர் வேதமணி (வயது 57). இவர் ஒரு குற்ற வழக்கில் கைதாகி 17 ஆண்டுகள் பாளையங் கோட்டை சிறையில் இருந்தார்.
பின்னர் அவர் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் விடுதலை ஆனார்.
பின்னர் சில வாரங்கள் கழித்து மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் அமைக்க ரூ.1 லட்சம் கடன் கேட்டு மனு அளித்தார்.
மனுவை பரிசீலித்த அதிகாரிகள் அவரை பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தினர்.
இதனையடுத்து சில வாரம் கழித்து அவர் மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
இதனையடுத்து அவரது மனுவை பரிசீலித்தபோது கடந்த காலத்தை காரணம் காட்டி கடன்தர வங்கிகள் மறுத்தது தெரியவந்தது.
இதை அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வேதமணி குறித்து விசாரிக்க உதவி கலெக்டருக்கு உத்தர விட்டார்.
உதவி கலெக்டர் விசாரணையில் வேதமணி சிறை செல்லும் முன்பு எலக்ட்ரீசியனாக பணியாற்றி யது தெரியவந்தது.
இதையடுத்து வேதமணியின் மறுவாழ்வுக்கு தேவையான உதவி செய்ய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, அவருக்கு மாவட்ட கலெக்டரின் சுய விருப்புரிமை நிதியின் கீழ் சுமார் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் செலவில் எலக்ட்ரிக்கல் கடை அமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
அந்த பொருட்களை கொண்டு வேதமணி மேல வெள்ளமடம் சின்னமாடன் குடியிருப்பு ரோட்டில் கருப்பசாமி கோவில் அருகே எலக்ட்ரிக்கல் கடையை அமைத்தார்.
அந்த கடையை கடந்த 16-ந்தேதி முதல் திறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
அங்கு வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கியும் கொடுத்து வருகிறார்.
அங்கு பொருட்கள் வைக்க தேவையான மேஜை மற்றும் அலமாரிகள் அனைத்தும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வேதமணியின் கடைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வேதமணி அந்த பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
அவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கவும் மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவா் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகிறன்றனர்.



