தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னைக்கு கிருஷ்ணா நீரும் முழுமையாக கிடைக்கவில்லை. 12 டிஎம்சிக்குப் பதில் வெறும் 2 டிஎம்சி நீர் தான் கிடைத்தது.
குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர நிதி 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜோலார்பேடையில் இருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் கொண்டு வரப்படும்.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் 200 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது. குவாரிகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



