
தமிழக போலீசாரின் கண்களில் இருந்து தலைமறைவாக இருந்து, திருப்பதியில் பிடிபட்டுள்ள முகிலனை, கடந்த வாரம் நாய் கடித்துள்ளதாகவும், அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் காணாமல் போனார். இதை அடுத்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி பூங்கொடி சார்பில், ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தலைமறைவான நாளில் இருந்து சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் நேற்று முகிலனை ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் தமிழில் கூடங்குளம் தொடர்பான முழக்கங்களை இடவே, அவர் குறித்த விசாரணையில், அவர் முகிலன் என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவே தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அதிகாலை 1.30க்கு முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை கொண்டு வந்தனர். தற்போது எழும்பூரில் முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னதாக, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்த போது அவரை நாய் கடித்ததற்கான காயம் இருந்ததாகவும், தன்னை ஒரு வாரத்திற்கு முன் நாய் கடித்ததாக முகிலன் மருத்துவர்களிடம் கூறியதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு ஏற்பட்ட நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளது என்றும், சரியான வகையில் உணவு உண்ணாததால், முகிலன் மிகவும் சோர்வாகவும் உடல் பலவீனத்துடனும் இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். முகிலன், தாடி வளர்த்துக் கொண்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், அவரை நாய் கடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.



