ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்: 2 பேர் கைது

lorry-containerசென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சாக்லேட் மூலப் பொருள்களுடன் கன்டெய்னர் லாரியைக் கடத்தியதாக கிடங்கு உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை, அங்கப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தஜோ சப் (44) வெளிநாடுகளுக்கு பொருள்களை அனுப்ப அனுமதி பெற்றுத் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்னை பொன்னேரியில் உள்ள தனியார் சாக்லேட் மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து இத்தாலியில் உள்ள சாக்லேட் நிறுவனத்துக்கு சாக்லேட் மூலப் பொருள்களை அனுப்ப இருந்தார். இதை அடுத்து ஏப். 8-ஆம் தேதி 5 கன்டெய்னர் லாரிகளில் பல கோடி மதிப்புள்ள மூலப் பொருள்களை ஏற்றி சென்னை துறைமுகத்துக்கு அனுப்பினார். ஆனால் இதில் ஒரு லாரி மட்டும் துறைமுகத்தைச் சென்று அடையவில்லை. இதுகுறித்து ஜோசப் விசாரித்ததில், அந்த லாரி ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. லாரி கடத்தல் குறித்து புழல் காவல் நிலையத்தில் ஜோசப் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த லாரி கடத்தப்பட்டு, புழல், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அ.சகாயராஜ் (30) என்பவரது கிடங்கில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அங்குச் சென்று, அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து சகாயராஜையும் கைது செய்தனர். அவரிடம் பெற்ற தகவலின்படி, லாரியைக் கடத்தியதாக மாதவரம், பொன்னியம்மன்மேடு முனுசாமிநகரைச் சேர்ந்த தி.சச்சின் குப்தா (28) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.