சென்னை: இந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப் பட்டதைக் கண்டித்தும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரியும் இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை சிக்கந்தர் சாவடி எனும் கந்தர் சாவடியில் விடுதலை சபை எனும் சட்ட விரோத ஜெபக்கூடத்தில் இந்து பெண் குழந்தைகளை அழைத்து சென்று ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து மெஸ்மரிஸம் செய்ய பயமுறுத்தியபோது, அக்குழந்தைகள் பயந்து, அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்போர் இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு உதவி கேட்டபோது, அங்கு சென்று அக்குழந்தைகளை விடுவித்தனர்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனை திசைத் திருப்பி, மதமாறிய மதிமுக வைகோ போன்றவர்களை அழைத்து வந்து, பைபிளை கொளுத்தியாக பொய் தகவலை ஊடகத்தில் கூற, அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சதீஷ், தினஷ் ஆகிய இருவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். அதனைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தின் உத்திரவின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இந்து விரோத அரசியல்வாதிகள், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது, சென்னையில் புதன்கிழமை (மார்ச் 21) நாளை காலை 10 மணி அளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்குத் தலைமை தாங்குகிறார் மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன். மாநிலச் செயலாளர் த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.