நாகை மாவட்டம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்!
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை மாவட்டம் வடசேரியில் மாட்டுக்கறி உண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நாகை மாவட்ட செயலாளர் பார்த்திபன் தாக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை! மாட்டிறைச்சி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வன்முறையை தூண்டும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி உள்ளனர்.
நாகை மாவட்டம் இப்போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நாம் தமிழர் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் நேரடியாக நாகை மாவட்ட இந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் உள்ளவர்களை ஏற்கனவே பார்க்க வந்த என்னையும் போலீசார் அனுமதிக்க வில்லை. திருப்பி அனுப்பினர். நாங்கள் நீதி கேட்டு தான் இங்கு வந்திருக் கிறோம்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய பலர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு ஒரு கூடாரம் உருவாகி வருகிறது! அதை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! என்ஐஏ., அமைப்புக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது! அதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றார் .
இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில், ஜூலை-26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது இந்து மக்கள் கட்சி.
நாகை மாவட்ட பொதுச் செயலாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கூறியுள்ளார்.