நெல்லையில் நேற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் மேயர் உமா மகேஸ்வரி கொலைச் சம்பவத்தில், உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்து வந்தார். கணவர் முருகுசந்திரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
நெல்லையில் மூவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி மூவரும் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் முறையே 12, 10, 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே மாரியம்மாளின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில் மாரியம்மாளே தன் குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து, படித்து வைத்துள்ளார்.
வாடகை வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள், ஓய்வின்றி பல வீடுகளின் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். எப்படியாவது மகள்களை படிக்க வைக்க வேண்டும் என்ற தீராத விருப்பத்தால், தான் சிரமங்களை அனுபவித்ததாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் பகிர்கின்றனர்.
மூன்று பெண்களின் கல்விக்காகவும் எதிர்காலத்துக்காகவுமே உழைத்தவர், தற்போது படுகொலை செய்யப் பட்டுவிட்டார். தந்தையை இழந்து தவித்த நிலையில், எல்லாமாக இருந்த தாயும் உயிரிழந்துவிட்டதால், எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் அம்மூன்று பெண்குழந்தைகளும் சோகமாக உள்ளனர்.
தாயை இழந்து தவிக்கும் மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக இன்று உமாமகேஸ்வரி மற்றும் அவர் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், பணிப்பெண் மாரியம்மாள் குறித்து விசாரிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் நெல்லை மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.