ஆலந்தூரில் உள்ள பூமி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிந்த 2 பேர், நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும் நடைபயிற்சி செய்பவர்களிடமும் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அருண்குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது, இளைஞர்கள் இருவர் அணிந்திருந்த ஐடி கார்டை பார்த்து விசாரித்துள்ளார்.
விசாரணையில், இவர்கள் அந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தார். காவலர் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கோடம்பாக்கத்தை சேர்ந்த சையத் அலிகான் வயது 29, ராயப்பேட்டையை சேர்ந்த கவுதம் வயது 29 என்பது தெரியவந்தது.

இவர்கள் போலி ஐடி கார்டு தயாரித்து அணிந்து கொண்டு பலரிடம் நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்த 8 ஆயிரத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் கைதான சையத் அலிகான் தொலைக்காட்சி சீரியலில் நடிப்பவர். செம்பருத்தி, பகல்நிலவு, மற்றும் வள்ளி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.



