நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்; பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நூலை வெளியிட்டுப் பேசினார்.
முன்னதாக இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் குறித்தும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறினார். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் வெங்கய்ய நாயுடு என்றார்.
இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அமித் ஷா.
அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை; மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன் என்று கூறிய அமித்ஷா, இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்; பணிகள் காரணமாக தமிழ் கற்க முடியவில்லை! ஆனால் நிச்சயமாக சென்னையில் தமிழில் பேசுவேன் என்றார் அவர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்து தமக்கு துளியும் குழப்பம் ஏற்படவில்லை என்றும் இனி அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறந்த அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பேசிய அமித் ஷா, தாம் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே அதை நீக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறினார். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது பற்றியோ, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியோ தனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை என்றார்.
அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!