ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை.. இடம்: வாணியம்பாடி ; நபர்: நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் – என்ற தகவல்களுடன் வீடியோ ஒன்று டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவில், சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் பழக்கடைக் காரர்களின் வண்டிகளைத் தள்ளிவிட்டு, சாலையில் தள்ளுவண்டியில் பழம் விற்பவர்களின் பழங்களை எடுத்து ஒவ்வொன்றாக வெளியில் தூக்கிப் போட்டு, சிலரது வண்டிகளைக் கவிழ்த்துவிட்டுச் செல்கிறார்.
இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகத் தளங்களிலும் விமர்சனங்கள் பலமாக எழுந்து வருகின்றன. உணவுப் பண்டத்தை இப்படி சீரழிப்பவருக்கு இறைவன் பலமான தண்டனை கொடுப்பான் என்றும், நகராட்சி ஆணையரிடம் பெரிய அளவில் நஷ்ட ஈடு பெற்றுத் தர வழக்கறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன.
ஊரடங்கு நேரத்தில் கடை திறந்து வியாபாரம் செய்தார்கள் என்று கூறி…
நடைபாதையில் பழம் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளின் வண்டிகளை தள்ளிவிட்டு… பழங்களை எடுத்து சாலையில் கவிழ்த்துவிட்டு…
கடைகளுக்குள் புகுந்து அனைத்தையும் எடுத்து சாலையில் கொட்டி…
இதை எல்லாம் நாம் சினிமாக்களில் ரவுடிகளின் மிரட்டல் சீன்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்…
இந்த இடம்… வாணியம்பாடி
சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அந்த அதிகாரி… நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் #CECILTHOMAS – என்று விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வாணியம்பாடி நகராட்சி ஆணியர் சிசில் தாமஸ், கோயம்பேடு சந்தை மூலம் பலருக்கு கொரோனா பரவியது. அதுபோல் வாணியம்பாடி நகரிலும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக மக்களைக் காப்பாற்றவே அவ்வாறு செய்யும் படி ஆகிவிட்டது. காலை எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இருப்பினும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.