
சாம் மானேக் ஷா – குறித்த ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு, இணையதளம் வழியாக சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் பி.டி.ஆஷா, நீதியசர் திரு. ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர். ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன், கேப்டன் டி.பி. இராமச்சந்திரன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
“சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். விஜயராகவன் ‘சாம் மானெக் ஷா’ குறித்து, முழுமையான தகவல்களை உள்ளடக்கிய நூலை எழுதியுள்ளார். இந்த நூலை ஒவ்வோர் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டும். நமது தேசத்தின் ஒப்பற்ற ராணுவ வீரர்களுடைய தியாக வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேசத்தின் மீது மதிப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற ராணுவ வீரர்களைப் பற்றிய நூல்கள் அவசியம் தேவைப்படுகின்றன” என்று நீதியரசர் ஜி. ஆர்.சுவாமிநாதன் தமது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

“புல்வாமா தாக்குதல் நடைபெற்ற தினத்தை நாம் மறக்கக் கூடாது. தேசத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை சரியான வகையில் பதிலடி கொடுத்து தடுக்க வேண்டும். சென்னை வார் மெமோரியலில், ஓர் இளம் ராணுவ வீரர் தனது மகனை அழைத்து வந்து தேசத்திற்காக இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களைப் பற்றிய தகவல்களை தன் மகனுக்கு விளக்கிச் சொன்னார். இந்த நிகழ்வைப் பார்த்த நான் உள்ளபடியே நெகிழ்ந்து போனேன். தென் நாட்டில் ராணுவ வீரர்களின் பங்களிப்புகளைப் பற்றி நமக்கு சரியானபடி சொல்லப்படவில்லை. இந்த நிலை மாறவேண்டும். அதற்கு நமது ராணுவ வீரர்களின் வாழ்க்கை சித்திரங்களை அவசியம் படிக்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும். சாம் மேனேக் ஷா பற்றிய நூலை எழுதி இருக்கும் வழக்கறிஞர் விஜயராகவன் ஆய்வு மனப்பான்மையுடன் இந்த நூலை எழுதியுள்ளார்” என புகழாரம் சூட்டினார் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் (பொது) ஆர். சங்கரநாராயணன்.
நிகழ்ச்சியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், வழக்கறிஞர் சுமதி, கேப்டன் வின்சென்ட் தாமஸ், ராமசாமி மெய்யப்பன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நூலாசிரியர் விஜயராகவன் ஏற்புரை வழங்கியதுடன், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூலைத் தமிழிலும் கொண்டு வரப் போவதாகக் கூறினார்.
எஸ். பவுண்டேஷனுடன் இணைந்து சென்னை பவுண்டேஷன் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.