சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் புகுந்து மூடியதால் நகரில் உள்ள 11 க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது!
சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்ததை அடுத்து, நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தாம்பரம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தி.நகர் முதல் அசோக் பில்லர் வரை பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. சென்னை துரைசாமி பாலம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சென்னையில் விடிய விடிய தொடரும் கனமழையால் நகரில் பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை நிலவரம்:
அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவானது.
தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது
சென்னையில் 11 சுரங்கபாதைகள் முடப்பட்டுள்ளன. துரைசாமி, மேட்லி, வியாசர்பாடி, கணேசபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்டவை மழை நீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டன.