சுகம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல. ஆத்மாவை உணர்ந்தாலே போதும், அதுவே சுகமானதாகும். ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
ஒருவன் தன் கழுத்தில் ஓர் உருத்திராட்ச மாலையை அணிந்திருந்தான்.
திடீரென்று ஒரு நாள், அந்த மாலை காணாமல் போய்விட்டது என்று நினைத்து வீடு முழுவதும் தேடிப் பார்த்தான். மாலை கிடைக்கவில்லை. பிறகு அவன் வேறு யார் வீட்டிலாவது வைத்து விட்டோமா என்று எண்ணி அக்கம் பக்கமிருந்த வீடுகளுக்குச் சென்று தேடிப் பார்த்தான்.
அப்படியும் மாலை கிடைக்கவில்லை. அந்த கிராமம் முழுவதும் தேடினான்; அப்பொழுதும் கிடைக்கவில்லை. ஒருவன் அவனைப் பார்த்து இரக்கப்பட்டு, “ஐயா, மாலை உங்கள் கழுத்தில்தான் உள்ளது. ஏன் மற்ற இடங்களில் தேடிக் கஷ்டப்படுகிறீர்கள்?” என்று கூறினான்.
அவனும், “எனக்குத் தெரியும்! என் பொருட்கள் என்றும் காணாமல் போகாது. அது எனக்குத் திரும்ப கிடைத்துவிடும்! “ என்று சொல்லி சமாளித்தான். அங்கே அவன் தொலைத்திருந்தால் தானே திரும்பப் பெற வேண்டியிருக்கும்!
அவனுக்கு அதன் இருப்பைப் பற்றிய ஞானம் இல்லை. அவ்வளவுதான்; கடைசியில்தான் அவன் தன்னுடைய உண்மை நிலையை அறிந்து கொண்டான். அதேபோல், சுகத்தை வெளியில் எங்கும் தேட வேண்டாம்; அது நமக்குள்ளேதான் இருக்கிறது.
அதைப் பற்றிய ஞானம் இல்லாத காரணத்தினால்தான் கஷ்டம், துக்கம் எல்லாம் நமக்கு வருகிறது. இதுதான் வேதாந்த தத்துவத்தின் சாரம்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்