சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கான மின்கடத்தும் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்ற பிரச்சினையின் எதிரொலியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் 1:25 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. அப்போது, ரயிலில் மின்சாரத்தைக் கடத்தும் ‘பேன்டோகிராஃப்’ என்ற கருவியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டு ரயில் நின்றது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் கட்டுபாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மின்சார ரயில்களுக்கான மின்விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 6 மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்தத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரம் வரையில் தாம்பரம் வழித் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மாலை 3.30 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்பட்டன.இதனிடையே, அரக்கோணம் காஞ்சிபுரம் தடத்தில் ரயில் சேவை மின்வயர் அறுந்து விழுந்ததால் அவ்வழியாக செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
இதில் குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கு வரும் திருமால்பூர் விரைவு ரயில், அங்கிருந்து புறப்பட்டு இடையில் எங்கும் நிற்காமல் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.இந்நிலையில் திருமால்பூர் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு உரிய நேரத்தில் வராததால் வேறு வழியின்றி செங்கல்பட்டில் இருந்து தினசரி 8.40 மணிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சென்னை கடற்கரை ரயிலை விரைவு ரயிலாக மாற்றியமைக்க இருப்பதாக ரயில் நிலையத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வண்டலூர் போன்ற பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அப்பயணிகள் நாங்கள் இந்த ரயிலில்தான் தினமும் செல்கிறோம்.
இந்த ரயிலில் சென்றால்தான் உரிய நேரத்தில் நாங்கள் பணிக்குச் செல்ல முடியும் ஆகையால் இந்த ரயிலை விரைவு ரயிலாக மாற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று, வழக்கம்போல சாதாரண ரயிலாகவே இயக்கப்படும் என நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 6 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.