சென்னை: விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். வரும் 13ஆம் தேதி வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அவர் தெரிவித்திருப்பவை…
விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர்.
நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். தற்போது திரையுலக வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
இவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தினால், திட்டமிட்டப்படி வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.