திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை:
திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 1.5 ஏக்கர் நிலம் ஆளுங்கட்சி மேலிடத்திற்கு நெருக்கமான தொழிலதிபருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த விதிமீறல் மற்றும் நிலம் தாரைவார்ப்பு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் நோக்குடன், வேலூரில் செயல்பட்டு வந்த சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புக்கான விரிவாக்க மையம் கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவள்ளுவர் பெயரில் தனிப்பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பல்கலைக்கழகம் நிரந்தரக்கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் சேர்க்காட்டில் உள்ள வளாகத்திற்கு மாற்றப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் செயல்பட்டு வரும் இடம் முழுக்க முழுக்க புறம்போக்கு நிலமாகும். அந்த நிலம் தொடர்பாக இதுவரை எந்தவித சர்ச்சையும் எழாத நிலையில், இப்போது அ.தி.மு.க. மேலிடத்திற்கு சொந்தமான சேகர் ரெட்டி என்பவர், பல்கலைக்கழக வளாகத்தில் தமக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருப்பதாக உரிமை கோரியிருக்கிறார். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகத்தில் பெங்களூர்&சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஒன்றரை ஏக்கர் நிலத்தை வளைத்த சேகர் ரெட்டியும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பெரு மரங்களை வெட்டி வீழ்த்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த இடத்திற்கு செல்ல பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை தனியார் சேகர் ரெட்டி ஆக்கிரமித்திருப்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் ஆகியோரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடையே உள்ள வணிகத் தொடர்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. சேகர் ரெட்டியும், வேலூர் ஆட்சியர் நந்தகோபாலும் கூட்டாக சேர்ந்து நில வணிகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கெல்லாம் மேலாக சேகர்ரெட்டி தமிழக ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் இவருக்குத் தான் வழங்கப் பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் அறங்காவலராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்களின் வீட்டுத்தேவை அனைத்தையும் இவர் தான் கவனித்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒப்பந்தங்களும் இவர் கைக்காட்டுபவருக்கே கிடைக்கிறது என்றால் இவரது செல்வாக்கு எந்தளவு தழைத்தோங்கியிருக்கிறது என்பதை அறியலாம்.

சேகர் ரெட்டிக்கு ஆளுங்கட்சியிலும், ஆட்சியிலும் எவ்வளவு செல்வாக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. சேர்க்காடு வளாகம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இத்தனை ஆண்டுகளும் அதில் தமது நிலம் இருப்பதாக உரிமை கோராத ஒருவர் திடீரென உரிமை கோருவதும், அது உண்மையா, பொய்யா என்பதைக் கூட ஆய்வு செய்யாமல் அந்த நிலத்தை சேகர் ரெட்டி கைப்பற்றிக் கொள்ள அனுமதிப்பதும் அருவறுக்கத்தக்க கேலிக்கூத்து ஆகும். ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகை வளாகத்தில் தலித்துகளுக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், தங்களது நிலத்தை திரும்ப ஒப்படைக்கோரி தலித்துகளும், அவர்கள் ஆதரவு அமைப்புகளும் போராட்டம் நடத்திய போது காவல்துறையை வைத்து விரட்டியடித்த ஜெயலலிதா, இப்போது பல்கலைக்கழக நிலத்தை ஆதாரம் இல்லாமல் ஒருவருக்கு தாரை வார்க்கிறார் என்பதிலிருந்தே அவரது சுயநலத்தையும், அரசு சொத்துக்களை தாரை வார்க்கும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்தில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக நிலம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அதற்குரிய விலையை சட்டப்படி வழங்குவது தான் முறையாகும். அதற்கு மாறாக நிலத்தை அவருக்கு தாரை வார்த்தால் நாளையே அரசினர் தோட்டத்திற்கு நடுவில் 5 ஏக்கர் நிலம் இருப்பதாக எவரேனும் உரிமை கோரினால் அரசு என்ன செய்யும்? இதையெல்லாம் யோசிக்காமல் அரசு நிலத்தை மணல் கொள்ளையருக்கு தாரை வார்க்கிறார் என்றால், தமது தவறுகளை யாராலும் தட்டிக் கேட்க முடியாது என்ற அதிகார மமதை தான் காரணம். இந்த மமதைக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்து கொள்கிறேன்.