கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை வரட்டுப்பாறையை
சேர்ந்தவர் இப்ராகிம்(45).
இவர் வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்து கோழி வளர்த்து வந்தார்.தினமும் காலையில் கோழிகளுக்கு இரை போடுவதற்காக வீட்டின் பின்புறம் இப்ராகிம் செல்வது வழக்கம். அதன்படி காலை இப்ராகிம் அங்கு சென்றார். அப்போது கோழிக்கூண்டின் அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் வரட்டுப்பாறை பகுதிக்கு வந்தனர். அங்கு இறந்து கிடந்த சிறுத்தையை பார்த்தனர். அப்போது சிறுத்தையின் நகங்கள் கோழிக்கூண்டின் இரும்பு கம்பியில் சிக்கியவாறு இருந்தது. மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் பார்த்தனர். அப்போது உடலில் எந்த பகுதியிலும் காயங்கள் இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து சிறுத்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.சிறுத்தை உடற்கூராய்வின் முடிவில் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






