நாமக்கல் மாவட்டம் மோகனூரில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மோகனூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் புதுத் தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித் (2) என இரு குழந்தைகளும் இருந்தனர்.
குணவதிக்கும் அவரது தந்தை கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணவதி தனது இரு குழந்தைகளையும் வீட்டருகே உள்ள கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார். பின், தானும் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மோகனூர் போலீசார் மூவரது பிரேதங்களையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் இறந்த சோகத்தில் தந்தை கேசவன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோகனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.