
மதுரை பகுதி கோயில்களில் குருபெயர்ச்சி விழா!
மதுரை: மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் ஈஸ்வர பட்டர் தலைமையில் குருபெயர்ச்சி மகா யாகம் நடைபெற்றது.
குரு பகவான், மகர ராசியிலிருந்து- கும்ப ராசிக்கு பெயர்ந்ததை முன்னிட்டு மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை அலங்காரங்கள் நடைபெற்றது. இதேபோல மதுரை மேலமடை சௌபாக்யா ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மஹாயாகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சத்திர வெள்ளாலபட்டி கிராமத்தில் அமைந்துள்ள வலா குருநாதன் கோவில் குருபெயர்ச்சியை ஒட்டி யாகபூஜை நடைபெற்றது.
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.
முன்னதாக, பொது மக்கள் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் தரிசனத்துக்கு ஆட்சியர் அனுமதி அளித்தார்.

சோழவந்தான் அருகே, குருவித்துறை குருபகவான் குருபெயர்ச்சி விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, காவல் துறையினர் இரு நாட்களும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால், பக்தர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன்பேரில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பாண்டியன், சத்திய கலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன்பின் குருவித்துறை குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கினர். எனினும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர கேட்டுக் கொள்ளப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழாவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.
குருபெயர்ச்சி விழா இங்கே சிறப்பாக நடைபெறும். இதை முன்னிட்டு, முந்தைய நாள் ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உட்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்து அறநிலையத் துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ் கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன் ராயர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடகா கூடுதல் டிஜிபி ஜெயராமன் லட்சார்ச்சனை யில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கர்ணன், தொழிலதிபர் எம்.கே. எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர்.
சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு முகாம் அமைத்திருந்தனர். மறுநாளும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது. சனிக்கிழமை பகல் 3 மணியளவில் பரிகார மகாயாகம் நடைபெற்றது.
மாலை 6:10 மணி அளவில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, குரு பகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோணா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.