விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த 2வது நபர் ஜூனத்அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த மாதம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அதிமுக கட்சியினர் சட்டபேரவையில் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத்அகமது உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின் படி 7 நாட்கள் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களுக்கு அடுத்த மாதம் மே 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் மீண்டும் மதுரை மத்திய சிறையில் நால்வரையும் அடைக்கபட்டனர். பள்ளி சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் 2 வதாக குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த ஜூனத் அகமது என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் கோரி கடந்த 12 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமின் மீதான விசாரணை கடந்த 21 ஆம் தேதி வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் இந்த வழக்கு விசாரணையை இன்று நடைபெறும் என்று தெரிவித்தார் இன்று மனுவின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் வந்த நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.






