அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய மகன் விஜயகுமார் அதிமுக மாவட்ட கலை பிரிவு செயலாளராக உள்ளார்.விஜயகுமாருக்கு திருமணம் முடிந்து அவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் விஜயகுமார் இன்று இரு சக்கர வாகனத்தில் காந்திநகரில் இருந்து சர்வீஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது மதுரையில் இருந்து புறவழிச்சாலையில் அருப்புக்கோட்டைக்கு அதிவேகமாக வந்த கார் சர்வீஸ் சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக விஜயகுமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்துறையினர் விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







