ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் காணப்படும் மான்கள் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் அடிக்கடி வருவது தொடர்கதையாகி வருகிறது. அது மட்டுமல்லாது கிருஷ்ணன்கோவில் பகுதியில் சாலையை கடக்கும் போது மான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் மலையிலிருந்து கீழே வந்த 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் விழுந்து உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். இந்த மான் இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






