மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் மாலை 3 மணிக்கு கோவிலில் இருந்து பெட்டி எடுத்து வாடிப்பட்டி இந்துநாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்திற்கு சென்றனர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆச்சி அம்மன் சாமிக்கு கரகம் ஜோடித்து பெரிய கருப்புசாமி, மதுரை வீரன், சங்கிலி கருப்பு, பட்டகொலைகாரன், பூச கருப்பு, ஆண்டி சாமிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலு க்கு வந்தனர்.
நள்ளிரவு12 மணிக்கு சுவாமிகளுக்கு காவு கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இரண்டாம் நாள் காலை8 மணிக்கு அனைத்து சாமிகளும் அருள்வாக்கு கூறுதல் மற்றும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு அனைத்து சாமிகளும் மழவராயர் பங்காளி மற்றும் சோழகர் மாமன் மைத்துனர் வீடுகளுக்கு சென்று அருள் பாலித்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. இரவு 9 மணிக்கு கரகம் கரைத்தலோடு திருவிழா முடிந்தது.
இதன் ஏற்பாடுகளை, மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு விழா குழுவினர் சோழகர் மாமன் மைத்துனர்கள் செய்திருந்தனர்.