திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அகத்தாகுளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அரசு சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளின் கருத்தை கேட்காமல் சிப்காட் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம், நத்தக்குளம், முத்தனேரி, குழலிக்குளம், நல்லதரை மற்றும் குருந்தங்குளம் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை எடுத்து சிப்காட் தொழிற் பூங்கா துவங்க கூடாது எனவும், விவசாயிகளின் கருத்தை கேட்காமல் எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியும் மற்றும் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து, திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.