- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்:
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விழா விரதத்தை தொடங்கினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா இன்று தொடங்கியது.
இதனையொட்டி, காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரி யார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில், மதுரை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.
காப்புகட்டிய பக்தர்கள் பால்,மிளகு,துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உணவு வருவர். காப்புக் கட்டிய பக்தர்கள் தினமும் காலை, மாலை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.
விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதேபோல, வரும் 7 ம் தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதி யிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரபத்மனை அழிக்க அன்னை தோவர்த்தனம்பி கைவிடம் முருகன் “சக்தி வேல்வாங்கும் ” நிகழ்ச்சி வரும் 6 ம் தேதியும், மறுநாள் 7 ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நடைபெறும்.
8 ம் தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும்,மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும், கோயிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.