
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் தொழிலாளி பலி : 6 பேர் படுகாயம்
விருதுநகர் அருகே தாதபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ளது சின்னவாடியூர் ஊராட்சி. இங்குள்ள தாதபட்டி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் வேதிப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ஆலையில் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.
தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர், சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மற்ற பகுதிகளுக்கு தீயைப் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி தடுத்து நிறுத்தினர்.
இந்த விபத்தில் 6 அறைகள் இடிந்து தரை மட்டமாகியது ஒருவர் பலி : மேலும், பெண் தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார் .
6 பேர் காயம் :
அதிவீரம்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.