
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி பெரிய கோயிலில் செவ்வாய் கிழமை நடந்த காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஒருவரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் புராண சிறப்புமிக்க நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு காவலாளிகள் பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கொலையாளிகள் கோயிலில் இருந்த சில சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவுகளையும் எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 6தனிப்படை அமைத்து தேடி வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் கூறினார். மேலும் எஸ்பி அளித்த பேட்டியில், “முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் குற்றவாளிகள் என அடையாளம் தெரியவந்துள்ளது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்றார்.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் நடந்த கோயில் பகுதிக்கு அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது கோயில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் விசாரித்த போது தானும் இப் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரும் சேர்ந்து கோவிலில் உண்டியல் கொள்ளையடிக்க வந்தபோது கோயில் காவலாளிகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கோவிலில் உண்டியல் கொள்ளையடித்த பொருட்களை தேவதானம் அருகே கல்லணை பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாக போலீசாரிடம் நாகராஜ் கூறியதையடுத்து போலீசார் அவரை அப்பகுதிக்கு அழைத்து சென்றனர். ஒளித்து வைத்திருந்த பொருட்களை நாகராஜ் எடுத்த போது அவர் கொலை செய்ய பயன்படுத்தி அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டை சாமியை வெட்டியுள்ளார். உடன் அவர் தப்பித்து சென்றதால் போலீசார் நாகராஜ்யை காலில் சுட்டு பிடித்துள்ளனர். தற்போது இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு குற்றவாளி தப்ப முயன்றபோது. உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது .
குற்றவாளி நாகராஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயில் முன் பொதுமக்களுடன் சேர்ந்து கொலைக் குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோயில் காவலர்கள் கொலை சம்பவம் குறித்து அறிந்தது செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான பொது மக்கள் கோயில் முன் திரண்டனர். பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளி நாகராஜ் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போலிசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான நபர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாரை ஏமாற்ற முயன்று உள்ளார்.கொலை வழக்கில் கைதான நாகராஜ் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளி வந்ததும், சிசிடிவி காட்சிகளில் அவரது உருவம் தெரிந்ததை வைத்து போலீஸார் நாகராஜை கைது செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கொலையாளி அப்பாவி போல் நடித்தது போலீசார் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





