உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

மதுரை:

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் கூறியது…

உலக வர்த்தக ஒப்பந்தம் காரணமாகவே, அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. மேலும், இதன் காரணமாக விவசாயம், வணிகம், சிறு தயாரிப்பு, தகவல் தொடர்பு, காப்பீடு என பல துறைகளிலும் அந்நிய முதலீடு அதிகரித்துவிட்டது. ஆன்-லைன் வர்த்தகம், விவசாயத்தில் மரபணு மாற்றம், மதிப்புக் கூட்டு வரி, சரக்கு மற்றும் சேவை வரி இவற்றுக்கெல்லாம் உலக வர்த்தக ஒப்பந்தம்தான் காரணமாக இருக்கிறது. வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்க வளர்ந்த நாடுகளால் வகுக்கப்பட்ட திட்டம்தான் இது. எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்றார்.