spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்இன்றைய இந்தியாவுடன் எவரும் மோத முடியாது..!

இன்றைய இந்தியாவுடன் எவரும் மோத முடியாது..!

- Advertisement -
manadhin kural
manadhin kural

மனதின் குரல் (13ஆவது பகுதி)
வானொலியில் ஒலிபரப்பு நாள் : 28.6.2020
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று தனது எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்று காலை வானொலியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து…

எனதருமை நாட்டுமக்களே, சங்கடம் என்னதான் பெரியதாக இருந்தாலும், பாரதநாட்டின் பண்பாடு, தன்னலமற்ற சேவை என்ற உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. எப்படி பாரதமானது சங்கடம் ஏற்படும் காலத்திலெல்லாம் உலகிற்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளதோ, அதையொட்டி இன்று அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நம் நாட்டின் பங்களிப்பு மேலும் பலமாகி இருக்கிறது.

உலகமும் இந்த வேளையில் பாரதத்தின் உலக சகோதரத்துவ உணர்வை அனுபவித்திருக்கிறது; அதே வேளையில் தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது.

லத்தாக்கில், பாரதநாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது. பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும். பாரத அன்னையின் பெருமைக்கு சற்றேனும் களங்கம் ஏற்படுத்த விட மாட்டோம் என்பதை நமது வீரம்நிறை இராணுவ வீரர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.

நண்பர்களே, லத்தாக்கில் வீரமரணத்தைத் தழுவிய நமது இராணுவ வீரர்களின் சாகஸச் செயல்களை நாடு முழுவதும் போற்றுகிறது, தனது சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறது. நாடனைத்தும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது, அவர்கள் முன்னே தலைவணங்குகிறது.

இந்த நண்பர்களின் குடும்பத்தாரைப் போலவே, ஒவ்வொரு இந்தியர் மனதிலும், இவர்களின் இழப்பு பெரும்வலியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது வீரம்நிறை நல்மைந்தர்களின் உயிர்த்தியாகத்தின் மீது அவர்களின் உறவினர்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பெருமிதம், தேசத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்று – இவை தான் தேசத்தினுடைய பலம். உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் பெற்றோர், தங்களுடைய மற்ற மகன்களையும் கூட இராணுவத்தில் சேவை செய்ய அனுப்பத் தயாராக இருப்பதையும் நீங்களே பார்த்திருக்கலாம்.

பிஹாரில் வசிக்கும் உயிர்த்தியாகி குந்தன் குமாரின் தகப்பனார் கூறிய சொற்கள் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தனது பேரப்பிள்ளைகளையும் தேசப் பாதுகாப்பின் பொருட்டு இராணுவச் சேவைக்கு அனுப்புவேன் என்றார் அவர். இந்தத் மனவுறுதி அனைத்து உயிர்த்தியாகிகளின் குடும்பங்களிலும் காணப்படுகிறது. உண்மையில், இவர்களின் குடும்பத்தாரின் தியாகம் வழிபாட்டுக்குரியது.

பாரத அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எந்த மனவுறுதியோடு நமது வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதே உறுதிப்பாடு நம்மனைவரின் இலட்சியமாக ஆக வேண்டும். நமது முயற்சிகள் அனைத்தும் இந்தத் திசையை நோக்கியவையாக இருக்க வேண்டும், இதனால் நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் சக்தி அதிகரிக்க வேண்டும், நாடு மேலும் திறம் படைத்ததாக ஆக வேண்டும், நாடு தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் – இவையனைத்தும் உயிர்த்தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மெய்யான சிரத்தாஞ்சலிகளாக அப்போது தான் அமையும்.

அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஜனி அவர்கள் எனக்கு எழுதியிருக்கும் மடலில், கிழக்கு லத்தாக்கில் நடைபெற்றதைப் பார்த்த பின்னர் நான் ஒரு சபதமேற்றிருக்கிறேன்; அதாவது நான் உள்ளூர்ப் பொருட்களை மட்டுமே வாங்குவேன், அவற்றுக்காகக் குரல் கொடுப்பேன் என்பது தான் அவரது சபதம். இப்படிப்பட்ட செய்தி தான் எனக்கு நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்த வண்ணம் இருக்கிறது. இவரைப் போலவே தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவர், பாரதம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு உடையதாக ஆவதைத் தான் காண வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

நண்பர்களே, சுதந்திரத்திற்கு முன்பாக, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை, உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறி இருந்தது. நம்மிடத்தில் பல ஆயுத தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. அப்போது பல நாடுகள் நம்மை விட அதிகம் பின்தங்கி இருந்தன, இன்றோ அவை நம்மை விட முன்னேறி விட்டன. சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.

நண்பர்களே, எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை. நீங்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்கினால், அவற்றுக்காகக் குரல் கொடுத்தால், நீங்களும் இந்த தேசம் வலுவடைய உங்கள் பங்களிப்பை ஆற்றுகிறீர்கள் என்பது உறுதி.

ஒருவகையில் நீங்களும் நாட்டுப்பணியில் ஈடுபடுகிறீர்கள் என்பது பொருள். நீங்கள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் புரியலாம், அனைத்து இடங்களிலும் நாட்டுப்பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கின்றன. நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தச் செயலைப் புரிந்தாலும், அது நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவையாகும். உங்களுடைய இந்தச் சேவை தேசத்தை ஏதோ ஒருவகையில் பலமுடையதாக்கவே செய்யும்.

மேலும் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் – நமது நாடு எந்த அளவுக்கு பலமுடையதாக ஆகிறதோ, அந்த அளவுக்கு உலகிலே அமைதிக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும். நாட்டிலே ஒரு சொல்வழக்கு உண்டு –

வித்யா விவாதாய தனம் மதாய,
சக்தி: பரேஷாம் பரிபீடனாய.
கலஸ்ய சாதோ: விபரீதம் ஏதத்,
ஞானஸ்ய தானாய ச ரக்ஷணாய.

विद्या विवादाय धनं मदाय, शक्ति: परेषां परिपीडनाय |
खलस्य साधो: विपरीतम् एतत्, ज्ञानाय दानाय च रक्षणाय||

அதாவது, இயல்பாகவே தீயோனாக இருந்தால், அவன், கல்வியை வீண்வாதத்திலும், செல்வத்தை மமதையிலும், பலத்தை மற்றவர்களைத் துன்புறுத்துவதிலும் செலவு செய்கிறான். ஆனால் சான்றோனான ஒருவன், தனக்கு வாய்க்கப்பெற்ற கல்வியை ஞானத்திற்காகவும், செல்வத்தை பிறருக்கு உதவி புரியவும், சக்தியை பிறரைக் காப்பதிலும் பயன்படுத்துகிறான்.

பாரதநாடு என்றுமே தனது சக்தியை இந்த உணர்வுப்படியே போற்றி வந்திருக்கிறது. பாரதம் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருக்கிறது – அது என்னவென்றால், நாட்டின் சுயகௌரவம், அதன் இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாப்பு. பாரதத்தின் இலக்கு, தற்சார்பு பாரதம். பாரதத்தின் பாரம்பரியம், நம்பிக்கை, நட்பு. பாரதத்தின் உணர்வு, சகோதரத்துவம். நாம் இந்த இலட்சியங்களை மனதில் தாங்கி தொடர்ந்து முன்னேறுவோம்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கரோனா ஏற்படுத்தி யிருக்கும் இந்த சங்கட வேளையில் நாடு ஊரடங்கை விட்டு வெளியேறி வருகிறது. இப்போது நாம் ஊரடங்கு என்ற பூட்டைத் திறந்து கொண்டிருக்கிறோம். இப்படி திறக்கப்படும் வேளையில் நாம் இரண்டு விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவை வீழ்த்த வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும், அதற்கு சக்தியளிக்க வேண்டும். நண்பர்களே, ஊரடங்கை விட அதிக எச்சரிக்கையோடு நாம் இந்த தளர்த்தல் காலத்தில் இருப்பது மிகவும் அவசியம். உங்களின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் உங்களை கரோனாவிடமிருந்து பாதுகாக்கும்.

நீங்கள் முக கவசத்தை அணியவில்லை, ஒருமீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை அல்லது மற்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள் என்பதை மிக முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியோர் விஷயத்தில் இதை நினைவில் வையுங்கள்.

ஆகையால் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் மீண்டும்மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம், உங்களிடத்திலும் அக்கறை காட்டுங்கள், மற்றவர்களிடத்திலும் கூட.

நண்பர்களே, ஊரங்கு தளர்த்தப்படும் இந்த வேளையில், பாரதத்தை பல பத்தாண்டுகளாகப் பிணைத்திருந்த, வேறு பல விஷயங்களும் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக நம்முடைய சுரங்கத் துறை முடக்கப்பட்டிருந்தது. வர்த்தகரீதியான ஏலமுறைக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு தீர்மானமானது, நிலையை முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. சில நாட்கள் முன்பாக, விண்வெளித்துறையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் செய்யப்பட்டது.

இந்த சீர்திருத்தங்கள்படி, பல்லாண்டுகளாக முடக்கநிலையில் இருந்த இந்தத் துறை, இப்போது சுதந்திரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தற்சார்பு பாரத இயக்கத்துக்கு வேகம் மட்டும் கிடைக்கப் போவதில்லை, தேசத்தின் தொழில்நுட்பமும் மேம்பாடு காணும். நமது விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால், இதில் பல விஷயங்கள் பல பத்தாண்டுகளாக தேங்கிப் போய் முடைநாற்றம் வீசி வந்தது. இந்தத் துறையும் இப்போது தளர்த்தப்பட்டிருக்கிறது.

இதனால் ஒருபுறம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கே வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் தன்னிச்சையாக விற்கலாம்; மறுபுறத்தில் அவர்களுக்கு அதிகப்படியான கடன்வசதிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நமது நாடு இந்தப் பெரும்சங்கடங்களைச் சந்தித்துவரும் வேளையில், இப்படி பல துறைகள் வரலாற்றுரீதியான முடிவுகளை மேற்கொண்டு, புதிய வளர்ச்சிப் பாதையை திறந்து கொண்டிருக்கின்றன.

என் அன்பான நாட்டுமக்களே, ஒவ்வொரு மாதமும் நாம் செய்திகள் பலவற்றை வாசிக்கிறோம், காண்கிறோம், இவை நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகின்றன. எப்படி ஒவ்வொரு இந்தியரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவதில் சித்தமாக இருக்கிறார்கள், அதில் ஈடுபாட்டுடனும் முனைப்போடும் இருக்கிறார்கள் என்பதை இவையனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன.

அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு கருத்தூக்கம் மிக்க சம்பவத்தை ஊடகத்தில் நான் படிக்க நேர்ந்தது. இங்கே, சியாங்க் மாவட்டத்தின் மிரேம் கிராமவாசிகள் செய்திருக்கும் ஒரு வித்தியாசமான செயல், பாரதநாடு முழுவதற்குமே ஒரு எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது.

இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர், கிராமத்திற்கு வெளியே பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு, கிராமம் நோக்கி வருவதை கிராமவாசிகள் கவனித்தார்கள். இந்த நிலையில் கிராமவாசிகள், கிராமத்திற்கு வெளியே quarantine, அதாவது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

கிராமத்திலிருந்து சற்று வெளியே, 14 குடிசைகளை உருவாக்கவும், வெளியிலிருந்து வரும் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்களை அவற்றிலே தங்கவைக்கவும் கூடிப்பேசி முடிவெடுத்தார்கள். இந்தக் குடிசைகளில் கழிப்பறை, குடிநீர்-மின்சார வசதிகள், தினசரி தேவைக்கான அனைத்துவிதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிரேம் கிராமவாசிகளின் இந்த சமூகமுயற்சியும் விழிப்புணர்வும் அனைவரின் பார்வையையும் இவர்கள்பால் திருப்பியது.

நண்பர்களே, மூதுரை ஒன்று உண்டு……

स्वभावं न जहाति एव, साधु: आपद्रतोपी सन |
कर्पूर: पावक स्पृष्ट: सौरभं लभतेतराम ||
ஸ்வபாவம் ந ஜஹாதி ஏவ, சாது: ஆபத்ரதோபி சன்.
கற்பூர: பாவக ச்ப்ருஷ்ட: சௌரபம் லபதேதராம்.

அதாவது, எப்படி கற்பூரம், தீயினால் சுடப்பட்டாலும் தனது நறுமணத்தைக் கைவிடுவதில்லையோ, அதே போல, நல்லோரும், துன்பம் நேரும் வேளையில் தங்களது நற்குணங்களையும், நல்லியல்பினையும் துறப்பதில்லை. இன்று நம் நாட்டில் இருக்கும் உழைப்பாளி நண்பர்களும், இதற்கான வாழும் எடுத்துக்காட்டுக்கள். இன்றைய காலகட்டத்தில், நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நமது புலம்பெயர் தொழிலாளிகள் தொடர்பான எத்தனை நிகழ்வுகளை நாம் கேள்விப்படுகிறோம்.

உத்தர பிரதேசத்தின் பாராபங்கியில், கிராமத்திற்கு மீண்டுள்ள தொழிலாளர்கள், கல்யாணி நதிக்கு அதன் இயற்கையான நிலையை மீட்டுத்தரும் பணிகளைத் தொடங்கினார்கள். நதியில் ஏற்பட்ட முன்னெற்றத்தைப் பார்த்து, அக்கம்பக்கப் பகுதிகளில் இருந்த விவசாயிகள், ஏனையோர் என அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள்.

கிராமத்திற்கு வந்தவுடன், தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவாறே, நமது தொழிலாளி நண்பர்கள், தங்கள் திறன்களை எப்படிப் பயன்படுத்தி, தங்களருகே இருந்த நிலையை மாற்றியமைத்தார்கள் என்பது அற்புதமான விஷயம்; ஆனால் நண்பர்களே, இப்படிப்பட்ட ஏராளமான கதைகள் நமது இலட்சக்கணக்கான கிராமங்களில் காணக்கிடைக்கின்றன, அவை நம்மை இன்னும் அடையவில்லை.

உங்களின் அருகிலே இப்படி ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கலாம். உங்களுடைய கவனம் இவற்றில் சென்றிருந்தால், நீங்கள் அப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல நிகழ்வுகளை என்னோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளவும். சங்கடம் நிறைந்த இந்த வேளையில், ஆக்கப்பூர்வமான இந்தச் சம்பவங்கள், இந்தக் கதைகள், மற்றவர்களுக்கும் கருத்தூக்கம் அளிக்கும்.

Cont…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe