October 20, 2021, 5:45 pm
More

  ARTICLE - SECTIONS

  2020 சுபமானதாக இல்லை… எப்படியாவது கடந்து சென்றுவிட விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி!

  130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

  PM Modi Addresses Nation On 50th Edition of ‘Mann Ki Baat’

  மனதின் குரல் (13ஆவது பகுதி)
  ஒலிபரப்பு நாள் : 28.6.2020
  தமிழாக்கம்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று தனது எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்று காலை வானொலியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து…

  எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில் அதிகம் இடம் பிடித்திருந்தன என்பது இயல்பான விஷயம் தான் என்றாலும், இன்றைய நாட்களில், தொடர்ந்து ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்யப்பட்டு வருகிறது என்றால், ‘இந்த ஆண்டு எப்போது கடந்து போகும்’ என்பது தான்.

  ஒருவர் மற்றவருக்கு தொலைபேசிவழி தொடர்பு கொண்டால், அப்போது இந்த விஷயம் தான் முதன்மையானதாக இருக்கிறது; இந்த ஆண்டு ஏன் விரைவாகக் கடந்து போக மறுக்கிறது?? நண்பர்களுக்கு இடையில் உரையாடல்களில், இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இல்லை, 2020 சுபமானதாக இல்லை என்றே வெளிப்படுத்துகிறார்கள். எப்படியாவது இந்த ஆண்டு விரைவாகக் கடந்து சென்று விடவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள்.

  நண்பர்களே, இத்தகைய பேச்சுக்கள் எல்லாம் ஏன் நடைபெறுகின்றன என்று சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. 6-7 மாதங்களுக்கு முன்பாக, கொரோனா போன்றதொரு சங்கடநிலை வரும் என்றோ, அதற்கு எதிரான போராட்டம் இத்தனை நீண்டிருக்கும் என்றோ நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? இந்தச் சங்கடம் ஒருபுறம் என்றால், நெருப்பிற்கு நெய் வார்த்தது போல தேசம் தினம் சந்தித்துவரும் புதிதுபுதிதான சவால்கள் இன்னொரு புறம். சில நாட்கள் முன்பாகத் தான் நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் அம்ஃபான் சூறாவளியின் கோரத் தாண்டவம்…..

  தொடர்ந்து மேற்குக் கரையோரத்தை நிஸர்க் சூறாவளியின் தாக்குதல். பல மாநிலங்களைச் சேர்ந்த நமது விவசாய சகோதர சகோதரிகள், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்…..

  இன்னும் இவை தவிர, நாட்டின் பல பாகங்களில் சின்னச்சின்ன நிலநடுக்கங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன; இவை போதாதென்றால் நமது அண்டைநாடுகள் சில புரிந்துவரும் செய்கைகளையும், முன்னிறுத்தும் சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில், ஒரே நேரத்தில் இத்தனை பேரிடர்கள், இந்த அளவிலான பேரிடர்கள், மிக அரிதாகவே நடக்கின்றன. இப்போது நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால், எங்கோ சின்னச்சின்ன சம்பவம் நடந்தாலும்கூட, அவற்றையும் இந்த சவால்களோடு இணைத்தே மக்கள் நோக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

  நண்பர்களே, இடர்கள் வருகின்றன, சங்கடங்கள் வருகின்றன ஆனால், கேள்வி என்னவென்றால், இந்த இடர்கள் காரணமாக 2020ஆம் ஆண்டினை மோசமான ஆண்டாக நாம் கருத வேண்டுமா என்பது தான். முந்தைய ஆறு மாதங்கள் கழிந்த விதத்தைப் பார்த்து, இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே மோசமானது என்று முடிவு செய்வது சரியா? சரியில்லை. எனதருமை நாட்டுமக்களே, கண்டிப்பாக சரியில்லை. ஓராண்டில் ஒரு சவால் வந்தாலும் சரி, 50 சவால்கள் வந்தாலும் சரி, எண்ணிக்கை கூடுதல்-குறைவாக இருப்பதனால் அந்த ஆண்டு மோசமான ஆண்டாகி விடாது.

  பாரத நாட்டின் சரித்திரத்தின் ஏடுகளை நாம் புரட்டிப் பார்த்தோமேயானால், எத்தனை எத்தனையோ இடர்கள்-சங்கடங்களை எல்லாம் கடந்து, அவற்றை வெற்றிகொண்டு, மேலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து வந்திருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு தாக்குதல்கள் பாரதத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன, பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன, பாரதம் என்ற நாடே வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும், அதன் கலாச்சாரம் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் மக்கள் கருதினார்கள்; ஆனால், இந்த அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் பாரதம் மேலும் பிரும்மாண்டமானதாக வளர்ந்து தழைத்தது.

  நண்பர்களே, நம் மக்கள் மத்தியிலே ஒரு கருத்து உண்டு – படைத்தல் நிரந்தரமானது, படைத்தல் நீடித்திருப்பது என்பது தான் அது. இந்தப் பின்புலத்தில் எனக்கு ஒரு பாடலின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன –

  यह कल-कल छल-छल बहती, क्या कहती गंगा धारा ?
  युग-युग से बहता आता, यह पुण्य प्रवाह हमारा I
  क्या उसको रोक सकेंगे, मिटनेवाले मिट जाएं,
  कंकड़-पत्थर की हस्ती, क्या बाधा बनकर आए I

  கலகலவெனவே சலசலவெனவே பெருகும் கங்கை என்ன உரைக்கிறது? யுகயுகமாக நமது புண்ணிய பிரவாகம் தொடர்ந்து சீறிப்பாய்கிறது. மேலும் இந்தப் பாடலிலே… இந்தப் பெருக்கை தடுப்போர் இருந்தால், அவர்கள் தகர்க்கப்படுவார்கள், இம்மியளவு சிறிய கற்களா பெருக்கைத் தடுக்கும் நீங்கள் சொல்லுங்கள்.

  பாரத நாட்டிலும், ஒருபுறம் பெரும் சங்கடங்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்த நிலையில், இந்த அனைத்து இடர்களையும் தகர்த்து, பலப்பல புதிய படைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. புதிய இலக்கியங்கள் உருவாயின, புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, புதிய சித்தாந்தங்கள் இயற்றப்பட்டன, சங்கடம் நிறைக் காலத்தில்கூட, படைத்தல் செயல்பாடு ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது,

  நமது கலாச்சாரம் தழைத்து-செழித்து வந்தது, நாடும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்தது. பாரதநாடு எப்போதும் விக்னங்களை, வெற்றிக்கான படிக்ககட்டுகளாக மாற்றிக் கொண்டே வந்தது. இந்த உணர்வோடு நாம், இன்றும் கூட, இந்த அனைத்துச் சங்கடங்களுக்கு இடையேயும் முன்னேறி வர வேண்டும்.

  நீங்களும் இந்த எண்ணத்தை மனதில் தாங்கி முன்னேறினீர்கள் என்றால், 130 கோடி நாட்டுமக்களும் முன்னேறுவார்கள், இந்த ஆண்டு, நாட்டிற்கு ஒரு புதிய சாதனை படைக்கும் ஆண்டாக மிளிரும். இந்த ஆண்டிலே தான், நாடு புதிய இலக்குகளை எட்ட முடியும், புதிய எழுச்சிகளை நோக்கி உயர முடியும், புதிய சிகரங்களை முத்தமிட முடியும். 130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

  … Cont…

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-