October 20, 2021, 5:59 pm
More

  ARTICLE - SECTIONS

  2020ஐ சிறப்பாக எதிர்கொண்டால்… அடுத்த பத்தாண்டுகளில் பாரதத்துக்கு புதிய திசை தென்படும்!

  நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள்.

  manadhin kural

  மனதின் குரல் (13ஆவது பகுதி)
  வானொலியில் ஒலிபரப்பு நாள் : 28.6.2020
  தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று தனது எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்று காலை வானொலியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து…


  என் மனம்நிறை நாட்டுமக்களே, கரோனா வைரஸானது, நமது வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்து விட்டது. லண்டனிலிருந்து வெளியாகும் Financial Times பத்திரிக்கையில் ஒரு மிகவும் சுவாரசியமான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கரோனா காலத்தில் இஞ்சி, மஞ்சள் உட்பட பிற மசாலாக்களின் தேவை, ஆசிய நாடுகள் தவிர, அமெரிக்கா வரையிலும்கூட அதிகமாகி இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் நமது நோய் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்வதில் உலகனைத்தின் கவனமும் இருக்கிறது; அதைப் போன்றே நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவல்ல இந்தப் பொருட்களின் தொடர்பு நமது நாட்டுடன் இருக்கிறது. நாம் இவற்றின் சிறப்பம்சத்தை, உலக மக்களுக்கு எளிய, சுலபமான வழிகளில் புரிய வைக்க வேண்டும். ஆரோக்கியமான உலகைப் படைப்பதில் இது நமது பங்களிப்பாக இருக்கும்.

  எனதருமை நாட்டுமக்களே, கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், ஒருவேளை, வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நமக்கு நினைவுகூட இல்லாது போயிருந்திருக்கும். பலர் மனஅழுத்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.

  இன்னொரு புறம், இந்த ஊரடங்குக் காலத்தில், சந்தோஷங்களின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட தாங்கள் மீள்கண்டுபிடித்திருத்திருப்பதாக சிலர் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டுக்களை, குடும்பத்தாரோடு சேர்ந்து விளையாடி ஆனந்தமாக இருந்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  நண்பர்களே, நமது தேசத்தில் பாரம்பரியமான விளையாட்டுக்களின் நிறைவான மரபு உண்டு. நீங்கள் பச்சீஸீ என்ற ஒரு விளையாட்டின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த விளையாட்டைத் தமிழ்நாட்டில் “பல்லாங்குழி” எனவும், கர்நாடகத்தில் “அலிகுலிமணே” எனவும், ஆந்திரத்தில் ”வாமன குண்டலூ” எனவும் அழைக்கிறார்கள்.

  உத்திகள் நிறைந்த இந்த ஆட்டம், ஒரு பலகையைப் பயன்படுத்தி விளையாடப்படுவது; இதில் பல குழிகள் இருக்கும், இவற்றில் மணிகள், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகள் போன்றவற்றை ஆடுபவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டு தென்னிந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா, பிறகு உலகம் முழுவதிலும் பரவியது என்று கூறப்படுகிறது.

  நண்பர்களே, இன்று ஒவ்வொரு குழந்தையும் ஏணி-பாம்பு விளையாட்டு பற்றி அறிந்திருக்கிறது. ஆனால் இதுவும் பாரம்பரியாகவே ஒரு இந்திய விளையாட்டின் வடிவம் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை மோக்ஷபாடம் அல்லது பரமபத சோபானம் என்பார்கள்.

  நம் நாட்டிலே மேலும் ஒரு பாரம்பரியமான விளையாட்டு உண்டு – குட்டா. சிறியவர் பெரியவர் என அனைவருக்குமான ஆட்டம் இது. இதற்குத் தேவை ஒரே அளவிலான 5 சிறிய கற்கள், இனி நீங்கள் குட்டா ஆடத் தயார். ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அது அந்தரத்தில் இருக்கும் வேளையில் நீங்கள் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஏனைய கற்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.

  பொதுவாக நமது உள்ளரங்க விளையாட்டுக்களுக்கென எந்த ஒரு பெரிய கருவிகளும் தேவையாக இருப்பதில்லை. ஒருவர் சாக்கட்டியையோ, கல்லையோ கொண்டு வந்தால், அதைக் கொண்டு நிலத்தில் சில கோடுகளைக் கிழிப்பார்கள், பிறகு ஆட்டம் தொடங்கி விடும். சில விளையாட்டுக்களில் பகடை தேவைப்படலாம், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

  நண்பர்களே, இன்று நான் இந்த விஷயங்கள் குறித்துப் பேசும் போது, பலருக்குத் தங்கள் சிறுபிராய நினைவலைகள் வந்து மோதும் என்பதை நான் நன்கறிவேன். அந்த இனிமைநிறை நாட்களை நீங்கள் ஏன் மறந்து போனீர்கள், அந்த விளையாட்டுக்களை நீங்கள் ஏன் மறந்தீர்கள் என்று தான் நான் கேட்கிறேன்.

  வீட்டிலிருக்கும் தாத்தா-பாட்டிகள், மூத்தோரிடத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புதிய தலைமுறையினருக்கு இந்த விளையாட்டுக்களை நீங்கள் அளிக்க வேண்டும் என்பது தான்; நீங்கள் அளிக்கவில்லை என்றால் வேறு யார் அளிப்பார்கள்? இணையவழிப் படிப்பு பற்றி நாம் பேசும் வேளையில், ஒரு சமநிலையை ஏற்படுத்த, இணையவழி விளையாட்டுக்களிலிருந்து விடுதலை அடையவும், நாம் கண்டிப்பாக இப்படிச் செய்தே ஆக வேண்டும்.

  நமது இளைய தலைமுறையினருக்காக, நமது ஸ்டார்ட் அப்புகளுக்காக, இங்கே, ஒரு புதிய, வலுவான சந்தர்ப்பம் காத்திருக்கிறது. நாம் பாரதநாட்டின் பாரம்பரியமான உள்ளரங்க விளையாட்டுக்களின் ஒரு புதிய-கவர்ச்சிகரமான வடிவத்தை முன்வைக்க வேண்டும். இவற்றோடு தொடர்புடைய பொருட்களைத் திரட்டுவோர், அளிப்போர், ஸ்டார் அப்புகள் ஆகியன மிகவும் பிரபலமடைந்து விடும்.

  நாம் மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்; அதாவது நமது இந்திய விளையாட்டுக்களுமே கூட உள்ளூரைச் சேர்ந்தவை தாமே, உள்ளூர் விஷயங்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற சபதத்தை நாம் ஏற்றிருக்கும் இந்த வேளையில், என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  பிள்ளைகளே, நீங்கள் நான் கூறுவது கேட்டு அதன்படி நடந்து கொள்வீர்கள் தானே!! ஒரு வேலை செய்யுங்கள், உங்களுக்கு சற்று நேரம் கிடைக்கும் போது, உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று, மொபைலை கையிலெடுங்கள், உங்கள் தாத்தா-பாட்டியினிடத்திலோ, வீட்டில் இருக்கும் வேறு பெரியோரிடத்திலோ, அவர்களுடன் நேர்காணல் நிகழ்த்தி அதைப் பதிவு செய்யுங்கள்.

  நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்களே, எப்படி ஊடகத்தார் நேர்முகம் காண்கிறார்கள், அதைப் போலவே நீங்களும் பேட்டி எடுங்கள். சரி அவர்களிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்? நானே இதற்கான துணுக்குகளை அளித்து விடுகிறேன், சரியா? அவர்களின் சிறுபிராயத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது, என்ன விளையாட்டுக்களை விளையாடி னார்கள், என்ன நாடகங்களை அவர்கள் பார்த்தார்கள், என்ன திரைப்பட்டங்களைப் பார்த்தார்கள், விடுமுறை நாட்களில் மாமா வீட்டுக்குச் சென்றார்களா, வயல்வெளிகளுக்குச் சென்றார்களா, எப்படியெல்லாம் பண்டிகைகளைக் கொண்டாடினார்கள் என, இப்படிப் பல வினாக்களை நீங்கள் அவர்களிடத்திலே கேட்கலாம்.

  அவர்களுக்குமேகூட, 40-50 ஆண்டுகள் அல்லது 60 ஆண்டுகள் பழமையான நினைவுகளின் மீது படிந்திருக்கும் தூசியினைத் தட்டிப் பார்க்கும் போது ஆனந்தம் உண்டாகும், 40-50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது, அவர்கள் இருந்த இடம், அவர்களின் சூழ்நிலை, மக்களின் வழிமுறைகள் என பல விஷயங்களை அவர்களிடம் கேட்கலாம், இவை உங்களுக்கு எளிதான ஒரு கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும். நீங்களே பாருங்களேன், இது உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும், ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே இது ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக, ஒரு காணொளி ஏடாக ஆகிப் போகும்.

  நண்பர்களே, சுயசரிதை அல்லது சரிதை வாயிலாக வெளியாகும் உண்மைகள் மிகவும் பயன்தரும் சாதனங்கள் என்பது சரிதான். நீங்களும் உங்கள் வீட்டுப் பெரியோரிடத்தில் உரையாடும் போது, அவர்கள் காலத்திய விஷயங்கள், அவர்களின் சிறுபிராயம், அவர்களின் இளமைக்காலம் போன்றவற்றை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலும். தங்களது சிறுபிராய நினைவுகளையும் சம்பவங்களையும் பற்றி, இந்த சந்தர்ப்பத்தில் தங்களின் வீட்டுப் பிள்ளைகளிடத்தில் பகிர்ந்து கொள்ள, பெரியோர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

  நண்பர்களே, நாட்டின் மிகப்பெரிய ஒரு பாகத்தில் இப்போது பருவமழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த முறை பருவமழை குறித்து வானிலையாளர்களும் உற்சாகத்தோடும், எதிர்பாப்போடும் இருக்கிறார்கள். மழை நன்றாக இருந்தால் நமது விவசாயிகளின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும், சூழல் பசுமை நிறைந்து காணப்படும். மழைக்காலத்தில் இயற்கையும் தனக்குத் தானே புதுத்தெம்பை ஊட்டிக் கொள்கிறது.

  மனிதர்கள், இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, இயற்கை தான் இழந்ததை ஒருவகையில் மழைக்காலத்திலே இட்டு நிரப்பிக் கொள்கிறது. ஆனால் இந்த இட்டு நிரப்புதல் எப்போது நடைபெறும் என்றால், நாமும் இயற்கை அன்னைக்குத் துணை நிற்கும் போது, நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் போது தான்.

  நாம் செய்யக்கூடிய கடுகத்தனை முயற்சிகூட, இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேருதவியாக இருக்கும். நமது நாட்டுமக்கள் பலரும் இது தொடர்பாக பெரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள்.

  கர்நாடகத்தின் மண்டாவலியில் 80-85 வயதுடைய ஒரு பெரியவரின் பெயர் காமேகவுடா ஆகும். காமேகவுடா அவர்கள் ஒரு எளிய விவசாயி என்றாலும், அவருடைய தனித்துவம் அலாதியானது. அவர் செய்திருக்கும் ஒரு வேலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். 80-85 வயது மதிக்கத்தக்க காமேகவுடா அவர்கள் தனது கால்நடைகளை மேய்க்கிறார், கூடவே அவர் தனது பகுதியில் புதிய குளங்களை வெட்டும் சவாலையும் மேற்கொண்டிருக்கிறார்.

  அவர் தனது பகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க விரும்புகிறார்; ஆகையால் நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒட்டி, சிறியசிறிய குளங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்ல விஷயமில்லையா!!

  80-85 வயது நிரம்பிய காமேகவுடா அவர்கள், தனது முயற்சி-உழைப்பு ஆகியவற்றின் துணையோடு, 16 குளங்களை இப்போதுவரை தோண்டியிருக்கிறார். அவர் தோண்டியிருக்கும் குளங்கள் பெரியனவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய முயற்சி மிகவும் பெரியது. இன்று, இந்தப் பகுதி அனைத்திற்கும் இந்தக் குளங்கள் காரணமாக புதியதொரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

  நண்பர்களே, குஜராத்தின் வடோதராவின் ஒரு எடுத்துக்காட்டும் கூட அதிக உத்வேகம் அளிக்கவல்லது. இங்கே மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புக்களும் இணைந்து ஒரு சுவாரசியமான இயக்கத்தை நடத்தினார்கள். இந்த இயக்கம் காரணமாக இன்று வடோதராவில், ஓராயிரம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடி லிட்டர் நீர், வீணாகிப் போவது தடுக்கப்பட்டு வருகிறது.

  நண்பர்களே, இந்த மழைக்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பேணவும், நாம் புதிதாக சிந்திக்க வேண்டும், ஆக்கப்பூர்வமானவற்றை செய்யவும் வேண்டும். பல இடங்களில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிப்பு முஸ்தீபுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த முறை நாம் முயற்சி மேற்கொண்டு, சூழலுக்கு இசைவான பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்கி, அவற்றைப் பூசிக்கலாமா? எந்தப் பொருட்களால் நதிகள்-குளங்களின் நீருக்கும், அதிலே வாழும் உயிரினங்களுக்கும் பங்கம் ஏற்படுமோ, அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தித் திருவுருவங்களை நாம் படைக்காமல் இருக்க முடிவு செய்வோம்.

  நீங்கள் இந்த விஷயங்களுக்கு இடையே மேலும் ஒன்றை மறந்து விட மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன் – அதாவது இந்த பருவமழைக்காலமானது தன்னோடு கூடவே பல நோய்களையும் கொண்டு தருகிறது. கொரோனா காலத்தில் நாம் இவற்றிலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆயுர்வேத மருந்துகள், கஷாயம், வெந்நீர் ஆகியவற்றை பயன்படுத்தி வாருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.

  என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று பாரதம் தனது காலஞ்சென்ற பிரதமர் ஒருவருக்குத் தனது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்துகிறது. அவர் இக்கட்டான சூழ்நிலையில் தேசத்துக்குத் தலைமை ஏற்றார். நமது இந்த முன்னாள் பிரதம மந்திரி, பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் தான். அவரது நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று.

  பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றிப் பேசும் வேளையில், அவரது அரசியல் தலைமை தொடர்பான பரிமாணமும் நம் முன்னே வருகிறது; அதே வேளையில், அவர் பன்மொழிப் பண்டிதர் என்பதும் அதே அளவு உண்மை. இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் அவரால் பேச முடிந்திருந்தது. அவர் ஒருபுறம் இந்திய பண்பாட்டுப் பதிவுகளில் ஊறியிருந்தாலும், மற்றொரு புறத்தில், அவருக்கு மேற்கத்திய இலக்கியம்-விஞ்ஞானம் ஆகியவை தொடர்பான ஞானமும் இருந்தது. அவர் பாரதத்தின் அதிக அளவு அனுபவமுடைய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

  அவருடைய வாழ்கையில் இன்னொரு பக்கமும் உண்டு, இதைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். நண்பர்களே, நரசிம்ம ராவ் அவர்கள் தமது சிறுபிராயத்திலேயே சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஹைதராபாதின் நிஜாம், வந்தே மாதரம் பாட அனுமதி மறுத்த போது, அவருக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

  அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. சிறிய வயதிலேயே நரசிம்ம ராவ் அவர்கள் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தார். தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் அவர் எந்த முயற்சியையும் விட்டு வைத்ததில்லை. நரசிம்ம ராவ் அவர்களிடம் இருந்த சரித்திரம் பற்றிய புரிதலும் ஆச்சரியமானது.

  மிக எளிய பின்புலத்திலிருந்து வந்த ராவ் அவர்களின் முன்னேற்றம், கல்வி மீது அவர் அளித்த அழுத்தம், கற்றலில் அவருக்கு இருந்த பேரார்வம், இவை அனைத்துடனும் கூட, தலைமை தாங்கும் திறம் – இவை அனைத்தும் நினைவில் கொள்ள வேண்டியவை.

  நரசிம்ம ராவ் அவர்களின் நூற்றாண்டின் போது, நீங்கள் அனைவரும், அவருடைய வாழ்க்கை, சிந்தனைகள் ஆகியவை பற்றி எத்தனை முடியுமோ அத்தனை அறிந்து கொள்ள முயலுங்கள். நான் மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

  எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். அடுத்தமுறை நாம் சந்திக்கும் வேளையில், மேலும் புதிய விஷயங்களை நாம் அலசலாம். நீங்கள், உங்களுடைய செய்திகளை, உங்கள் நூதனமான கருத்துக்களை, கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம், இனிவரும் நாட்களில் மேலும் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுவோம்.

  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நான் கூறியதைப் போல, இந்த ஆண்டு, அதாவது 2020இல் நாம் மிகச் சிறப்பாக செயல்படுவோம், முன்னேறுவோம், தேசத்தை புதிய சிகரங்களுக்குக் கொண்டு சேர்ப்போம். 2020ஆம் ஆண்டு, வரும் பத்தாண்டிலே பாரத நாட்டுக்கு ஒரு புதிய திசையை அளிக்கவல்லதாக அமையும்.

  இந்த நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள். இந்த நல்வாழ்த்துக்களோடு, உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-