
கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் என மகன், தந்தை இருவரும் கொரோனா காலத்தில் அனுமதிக்கப் பட்ட காலத்தையும் கடந்து மொபைல் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்று காரணம் கூறி, போலீஸார் கடையை அடைக்குமாறு கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
போலீஸார் விசாரணையில் இருவரையும் அடித்ததாகவும், அத பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலம் குன்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்ததை அடுத்து, அரசுக்கு நெருக்கடி முற்றியது.
திமுக., உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அரசியல் செய்யத் தொடங்க, பல்வேறு அமைப்புகள், முக்கியப்பிரமுகர்கள் என பலரும் களத்தில் இறங்க, இந்தச் சம்பவத்துக்குக் காரணமான போலீஸார் இருவர், சஸ்பண்ட் செய்யப் பட்டனர்! சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் முதலில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டு, தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
இந்நிலையில் போலீசாரால் உயிரிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.