குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

       அடுத்த 2016-17 ஆண்டிற்குரிய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னமும் இரண்டு மாதங்களே உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட்க்கு வேண்டி கேரளாவில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் மற்றும் ரயில் திட்டங்களுக்கு நிதி ஓதுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை ரயில்வே அமைச்சருக்கு கேரளா முதல்வர் அளித்துள்ளார். இந்த மனுவில் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக இரண்டு ரயில்கள் இயக்க கோரிக்கை வைத்துள்ளார். குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் இந்த கோரிக்கை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக அமைந்துள்ளது. இதன்படி கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று இரண்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி – கோவா ரயில்:

        கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களுர், உடுப்பி வழியாக வாஸ்கோடகாமாவிற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்  என்று பல ஆண்டுகளாகவே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். கோவா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு இடங்களும் சுற்றுலா பிரசித்தி பெற்ற இடங்களாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டால் அனைத்துவிதமான பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவா ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில் மங்களுர் வழியாக செல்வதால் மேலும் சிறப்பு ஆகும்

திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி ரயில்:-

        திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்லும் பயணிகளால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை கேரளா முதல்வரும் தற்போது வலியுறுத்தியுள்ளார்.  இந்த ரயில் இயக்கப்பட்டால் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு காலையில் திருவனந்தபுரம் செல்வதங்கும், மாலையில் பணிமுடிந்து  வீடுகளுக்கு வருவதற்கு என இரண்டு மார்க்கங்களிலும் ஓர் ரயில் வசதி கிடைக்கும்.

     பொதுவாக ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை ஒருவாரத்துக்கு முன்பாகவே மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வைப்பார்கள். இவ்வாறு ஒரு வாரத்துக்கு முன்பாக வைத்தால் ஒரு கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது கேரளா முதல்வர்  இரண்டு மாதத்துக்கு முன்பாகவே இந்த கோரிக்கைகளை சமர்ப்பித்ததால்  இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மிகுந்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டால் குமரிக்கு இரண்டு வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்படலாம்.

 தமிழக முதல்வரும் கோரிக்கை வைக்க வேண்டும்
       கேரளா முதல்வர் தங்கள் மாநிலத்துக்கு வேண்டி கூடுதல் ரயில்கள், ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி, பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள், ஒருசில திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதி என பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு என ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதைப்போல் தமிழக முதல்வரும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு வேண்டி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய கோரிக்கைகளை ரயில்வே அமைச்சர், பாரதம பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்தித்து கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த மின்னஞ்சலுடன் கேரளா முதல்வரின் கோரிக்கை மனு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனு கேரளா முதலமைச்சரின் இணையதள முகவரியிலிருந்து எடுக்கப்பட்டது.

http://www.keralacm.gov.in/images/stories/pr/2015/october/Memorandum%20to%20Railway%20Minister.doc

– எட்வர்ட் ஜெனி